LATEST NEWS
“முடிவுக்கு வந்தது ஒரு மாபெரும் சகாப்தம்…” இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு… முதலமைச்சரிடம் இயக்குனர் ஆர்.கே செல்வமணி விடுத்த கோரிக்கை…!!
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84) அவர்கள், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலையில் காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தனது மகன் மனோஜ் காலமான துயரத்திலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த அவர், தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ என்ற புகழ்பெற்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் கால்பதித்த இவர், கிராமிய வாழ்வியலை மையமாகக் கொண்டு பல முத்திரை பதிக்கும் காவியங்களை உருவாக்கித் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சகாப்தத்தை நிலைநாட்டினார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இந்தத் திடீர் மறைவு ஒட்டுமொத்தத் திரைத்துறையினரையும், அவரது ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசுக்கு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அவர்கள் முக்கியக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். தமிழ் சினிமா உலகின் சூரியனாகத் திகழ்ந்த ஒரு மாபெரும் கலைஞனை இழந்து தவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்குத் தமிழக அரசு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தி வழியனுப்ப வேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
