LATEST NEWS
“வீடியோ எடுக்கிறியா…? உனக்கு மருந்தே கிடையாது..!” தில்லி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் ஊழியர்களின் அடாவடி..!!
தில்லி துவாரகா செக்டார்-9 பகுதியில் அமைந்துள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவமனையின் ‘ஜன் அவசதி கேந்திரா’ மருந்தகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மருந்தகத்தின் முன் நோயாளிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், அங்குள்ள ஊழியர்கள் மருந்து வழங்காமல் சும்மா அமர்ந்திருந்துள்ளனர். இதில் நோயாளி ஒருவர் மருந்து கிடைக்க எவ்வளவு நேரமாகும் எனப் பணிவுடன் கேட்டதற்கு, அங்கிருந்த ஊழியர் “உங்களுக்குத் தெரியவில்லையா? இப்போது தரை துடைக்கப்படுகிறது. அது காய்ந்த பிறகுதான் உங்களுக்கு மருந்து கிடைக்கும்” என்று முரட்டுத்தனமாகப் பதிலளித்தார்.
நோயாளிகள் தரை காய்வதற்கும் மருந்து வழங்குவதற்கும் என்ன சம்பந்தம் எனக் கேள்வி எழுப்பியபோது, அந்த ஊழியர் மேலும் ஆத்திரமடைந்து இன்னும் அரை மணி நேரம் ஆகும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஒருவர் இந்த அநியாயத்தைத் தனது கைபேசியில் காணொளியாக பதிவு செய்யத் தொடங்கியுள்ளார். இதைக் கண்டு கோபத்தின் எல்லைக்கே சென்ற அந்த ஊழியர், அவருக்கு மருந்து வழங்க முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்ததோடு, தகாத வார்த்தைகளால் பேசி அவர் மீது தாக்குதல் நடத்தவும் முயன்றதாகக் கூறப்படுகிறது.
https://www.instagram.com/reel/DbXVoVGx9bH/?utm_source=ig_web_button_share_sheet
இந்த ஒட்டுமொத்த சம்பவத்தின் காணொளியும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. மருத்துவமனை ஊழியர்களின் இந்த மோசமான அணுகுமுறையையும் நிர்வாகச் சீர்கேட்டையும் பொதுமக்கள் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்துத் தில்லி சுகாதாரத் துறையும் அரசு அதிகாரிகளும் உடனடியாகச் தலையிட்டு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
