LATEST NEWS
விளம்பரத்திற்காக இப்படியா செய்வது…! தவெக நலத்திட்ட உதவிகளில் ரேஷன் அரிசி முறைகேடு… தவெக நிர்வாகிக்கு எதிராக நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!!
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்ட பைகளில், அரசு வழங்கும் இலவச ரேஷன் அரிசி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு, சொந்த நலத்திட்ட உதவி போல வழங்கப்பட்டதாக மதுரை தெற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.தங்கப்பாண்டி மீது கடுமையான புகார் எழுந்துள்ளது.
இவ்வாறு விநியோகிக்கப்பட்ட பைகளில் இருந்த ரேஷன் அரிசி மிகவும் தரமற்றதாகவும், துர்நாற்றம் வீசக்கூடியதாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் அதிருப்தியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடனடியாக புகார் அளித்தனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட மதுரை மாவட்ட வருவாய் அலுவலர், அந்த அரிசியைப் பறிமுதல் செய்து உண்மைத்தன்மையை அறிவதற்காக ஆய்வகச் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியைத் தங்களின் சொந்த உதவி போலக் காட்டி விளம்பரப்படுத்துவது வெட்கக்கேடான செயல் என்று சாடியுள்ளார். மேலும், இந்த விதிமீறல் குறித்து உரிய விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் இதற்கு காரணமான தவெகவினர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
