LATEST NEWS
எப்படியெல்லாம் யோசிக்குறாங்க..! “பிரதமர் மோடி” முகமூடியுடன் வந்த கொள்ளையன்.. ரூ.5 லட்சம் மதிப்பிலான போன்கள் திருட்டு… பகீர் கிளப்பிய சிசிடிவி காட்சி..!!
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மொபைல் கடை ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்த திருடன் ஒருவன் புகுந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40 ஸ்மார்ட்போன்களைத் திருடிச் சென்றுள்ள விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கரேடா நகரின் பேருந்து நிலையம் அருகே உள்ள ‘மாதேஸ்வரி மொபைல்ஸ்’ என்ற கடையின் மாடிப் படிக்கட்டு கதவின் பூட்டை உடைத்து, நள்ளிரவில் திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர். மறுநாள் காலையில் கடையைத் திறந்த உரிமையாளர் லட்சுமண் சென், விலையுயர்ந்த போன்கள் திருடப்பட்டு, பெட்டிகள் சிதறிக்கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்தார்.
புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கரேடா காவல்துறையினர், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த விநோத கொள்ளை வெளிச்சத்திற்கு வந்தது. அதில் ஒரு திருடன் தன் அடையாளத்தை மறைப்பதற்காகப் பிரதமர் மோடியின் முகத்தைப் போன்ற முகமூடியை முகத்தில் அணிந்துகொண்டு மிக அசாதாரணமாகத் திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதே கும்பல், அதே இரவில் அருகில் இருந்த மற்றொரு மொபைல் கடையின் பூட்டை உடைக்கவும் முயற்சி செய்திருப்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
राजस्थान के भीलवाड़ा में चोर, नरेंद्र मोदी का मुखौटा लगाकर आए और दुकान से 40 मोबाइल चुराकर ले गए !! pic.twitter.com/jZWfdEjWcW
— Sachin Gupta (@Sachingupta) June 30, 2026
நகரத்தின் பரபரப்பான பகுதியிலேயே இத்தகைய கொள்ளை சம்பவம் நடந்துள்ளது உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று காவல்துறையினருக்கு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்து, சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் முகமூடி கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
