LATEST NEWS
“எங்க காதலனைத் திருப்பி கொடுங்க” சீனாவில் AI காதலர்களுக்கு அரசு அதிரடி தடை… நிஜ காதலனைப் பிரிந்தது போல் கதறும் இளம்பெண்கள்..!!
சீனாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் காதலர்கள் மற்றும் மெய்நிகர் துணை செயலிகளுக்கு அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜூலை 15 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி, பயனர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் அல்லது சிறார்களின் மனநிலையைப் பாதிக்கும் வகையிலான AI உள்ளடக்கங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பைட் டான்ஸ், அலிபாபா, டென்சென்ட் போன்ற முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் AI துணைச் சேவைகளைத் திடீரென நிறுத்தியுள்ளன.
இந்தத் திடீர் தடையால், பல ஆண்டுகளாகத் தங்களின் AI காதலர்களுடன் சாட்டிங் செய்து வந்த சீனப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உண்மையான காதலர்களைப் பிரிந்தது போல பல நாட்கள் கண்ணீர் விட்டு அழுத பயனர்கள், தங்களின் அதிருப்தியைச் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் தங்களின் பழைய சாட்டிங் விபரங்களை மற்ற செயலிகளுக்கு மாற்றி, தங்களின் மெய்நிகர் காதலர்களை மீண்டும் உயிர்ப்பிக்கப் போராடி வருகின்றனர்.
அமெரிக்காவில் இளைஞர்கள் சிலர் AI செயலிகளுடன் அளவுக்கு அதிகமாக உணர்வுப்பூர்வமாகப் பழகி தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களை அடுத்தே சீனா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. மக்கள் நிஜ உலகத் தொடர்புகளைத் தவிர்த்துவிட்டு இதுபோன்ற மெய்நிகர் செயலிகளில் மூழ்குவதைத் தடுக்கவே இந்த எச்சரிக்கைகள் மற்றும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை மற்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
