LATEST NEWS
உடனே கூட்டத்தைக் கூட்டுங்க… அங்கேயே உண்மையை போட்டு உடைக்கிறேன்… எடப்பாடிக்கு சி.வி.சண்முகம் அதிரடி சவால்! அதிமுகவில் அடுத்தடுத்து பரபரப்பு..!!
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பிரச்னை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளித்து, ஆட்சியில் அமைச்சுப் பொறுப்புகளைப் பெறலாம் என எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தலைமையிலான அணியினர் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறப்படும் 25 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அதிமுகவில் இரு அணிகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணங்களை விவாதிக்க உடனடியாக செயற்குழு மற்றும் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என எதிர்ப்பு அணியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், தேர்தல் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி காரணமல்ல என்றும், மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைத்த வேட்பாளர்களே காரணம் என்றும் அதிமுக மூத்த தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த சி.வி.சண்முகம், அவர் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவிப்பதாகவும், அதன் மூலம் எடப்பாடி பழனிசாமியையே தரம் தாழ்த்துவதாகவும் விமர்சித்தார்.
தொடர் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகும் கட்சித் தலைமையின் மீதான கேள்விகளைத் தவிர்க்க முடியாது என சி.வி.சண்முகம் கூறினார். பாமக கூட்டணியின் காரணமாகவே அதிமுக 34 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 37 தொகுதிகளில் 35 இடங்களில் தோல்வியடைந்ததையும், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் ஏற்பட்ட பின்னடைவையும் சுட்டிக்காட்டினார். வெற்றி பெற்றால் தலைவரின் செல்வாக்கு என்றும், தோல்வியடைந்தால் மாவட்டச் செயலாளர்களே காரணம் என்றும் கூறுவது எந்த வகையில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார்.
