LATEST NEWS
“இவங்களுக்கு யார் ட்ரெய்னிங் கொடுத்தது..?” தீயணைப்பு ஹோஸ் குழாயைக் கையாள முடியாமல் திணறிய வீரர்கள்… பிசிஎம்சி தீயணைப்புப் படையினரின் குழப்பமான செயல்பாட்டைப் பார்த்து அதிரும் நெட்டிசன்கள்..!!
புனே-நாசிக் நெடுஞ்சாலையில் போசரி மேம்பாலத்திற்கு அடியில் உள்ள ஆனந்த் மருத்துவமனை அருகே, ஒரு தனியார் நிறுவனப் பேருந்தில் திடீரென தீப்பிடித்தது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியின் தீயணைப்புப் படை வாகனம் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தத் முற்பட்டபோது, தண்ணீரைப் பீய்ச்சியடிக்கப் பயன்படும் குழாய் சுருண்டு மாட்டிக்கொண்டதால் அதனை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சில நொடிகளில் செய்ய வேண்டிய பணிக்கு இவ்வளவு தாமதமாவதைக் கண்ட நெட்டிசன்கள், “இவர்களுக்கு யார் பயிற்சி கொடுத்தது?” என்று கேள்வி எழுப்பியதோடு, உபகரணங்களைக் கையாள்வதில் உள்ள திறமையின்மையையும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும், இச்சம்பவத்தின் போது அங்கிருந்த போக்குவரத்து காவல்துறையினர், தீயணைப்பு வாகனம் சிரமமின்றிச் செயல்பட வழிவகுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் அவசரகாலத்தில் உபகரணங்களைச் சரியாகப் பயன்படுத்துதல் மற்றும் போக்குவரத்து மேலாண்மை ஆகிய இரு முக்கியக் குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இச்சம்பவம் குறித்து பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சித் தீயணைப்புத் துறையிடமிருந்து முறையான விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
