LATEST NEWS
இனி ரூ.10 எக்ஸ்ட்ரா தர தேவையில்லையா..?! டாஸ்மாக் பாட்டில்களுக்கு புது ரூல்ஸ்.. சம்பளத்தை உயர்த்தி அரசு அதிரடி நடவடிக்கை..!!
தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வை முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. கடை வாடகை, மின்சாரக் கட்டணம் மற்றும் சரக்குகளை இறக்குவதற்கான போக்குவரத்துச் செலவுகள் போன்ற காரணங்களால் இந்த கூடுதல் தொகையைப் பெறுவதாக ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் அரசு இந்த அதிரடி ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
இந்த 25 சதவீத ஊதிய உயர்வின் மூலம் டாஸ்மாக் ஊழியர்களின் மாதச் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன்படி, உதவி விற்பனையாளர்களின் சம்பளம் ரூ.14,340-லிருந்து ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களின் சம்பளம் ரூ.15,530-லிருந்து ரூ.19,413 ஆகவும், மற்றும் மேற்பார்வையாளர்களின் சம்பளம் ரூ.17,850-லிருந்து ரூ.22,313 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஊதிய மாற்றத்தின் காரணமாக, அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.110.74 கோடி செலவாகும் என்றும், இதன் மூலம் டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளம் மற்றும் பலன்களுக்கான மொத்த ஆண்டுச் செலவு ரூ.553.72 கோடியாக உயரும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான இ.எஸ்.ஐ மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டங்களை வழங்குவது குறித்தும் அரசு ஆலோசித்து வரும் நிலையில், விதிமீறல்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் எச்சரித்துள்ளார். ஏற்கனவே இது போன்ற புகார்களில் சிக்கிய 30 முதல் 40 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், மதுபானங்களின் விலையை உயர்த்தி அரசுக்கு வருவாயைப் பெருக்குவது தங்களின் நோக்கமல்ல என்றும், சில்லறை விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
