LATEST NEWS
ஐபிஎல் ரசிகர்களுக்குப் பேரிடி!.. 3 முன்னணி சர்வதேச மைதானங்களுக்கு அதிரடித் தடை.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு..!!
மைதானங்கள் மற்றும் ஆடுகளங்களைப் பராமரிக்க நிலத்தடி நீர் அல்லது நன்னீருக்குப் பதிலாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரையே பயன்படுத்த வேண்டும் என்றும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவ வேண்டும் என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரின்போது ராய்ப்பூரின் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச ஸ்டேடியம், ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் ஸ்டேடியம் மற்றும் மும்பையின் டாக்டர் டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியம் ஆகிய மைதானங்கள், தங்களது பராமரிப்பிற்குப் பயன்படுத்திய நீரின் மூல ஆதார விவரங்களை வெளியிடத் தவறின.
இது தொடர்பான வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் தீவிரமாக விசாரணை செய்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, விதிகளை மீறிய ராய்ப்பூர், ஜெய்ப்பூர் மற்றும் மும்பையின் அந்த மூன்று சர்வதேச மைதானங்களிலும் போட்டிகளை நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று அதிரடியாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அந்தந்த மைதான நிர்வாகங்கள் முறையான மற்றும் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கும் வரை, அங்கு எந்த ஒரு விளையாட்டு நடவடிக்கைகளும் நடைபெறக் கூடாது என்றும் அந்த உத்தரவில் மிகக் கடுமையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
