LATEST NEWS
“‘இனி விஜய்யை என் மகனாகவே பார்க்கிறேன்!’.. கரூர் கலெக்டர் ஆபீஸில் கதறிய தாய்.. நெஞ்சை உலுக்கிய நெகிழ்ச்சிச் சம்பவம்”..!!
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று, கரூரின் வேலுசாமிப்புரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மற்றும் ரோட்ஷோ நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் கலந்துகொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட அசுரத்தனமான கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், இளைஞர்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்திருந்தார். அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 நபர்களுக்கான அரசு பணி நியமன ஆணைகளை, முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் நேரில் வழங்கினார். தங்களது குடும்பத்தின் தூணாக இருந்தவர்களை இழந்து தவிக்கும் இந்தச் சூழலில், முதலமைச்சரின் இந்த நடவடிக்கை தங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாகவும் மறுவாழ்வாகவும் அமைந்துள்ளதாகப் பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் தனது மகனை இழந்த ஞானாம்பாள் என்ற 50 வயதுத் தாய், தனது படிப்பு மற்றும் வயது காரணமாகத் தனது மகளுக்கு அரசு வேலை வழங்குமாறு கேட்டுக்கொண்டதை ஏற்றுக்கொண்ட முதலமைச்சருக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். “இந்த உதவியின் மூலம் விஜய்யை எனது மகனாகவே பார்க்கிறேன்” என அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார். இதேபோல், மனைவியை இழந்த முருகேசன் என்பவரது மகனுக்கும் வேலை வழங்கப்பட்டது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாகக் கரூர் வந்த விஜய்க்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததைக் கண்ட பொதுமக்கள், அன்று போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில் வந்து விபத்து நேர்ந்த கரூருக்கு, இன்று தமிழகத்தின் அரியணையில் முதலமைச்சராக அவர் அடியெடுத்து வைத்திருப்பது தங்களுக்குப் பெருமையளிப்பதாகத் தெரிவித்தனர்.
