LATEST NEWS
“இந்த சிஸ்டமே சரியில்ல” தவெக ஆட்சியிலும் ஓயாத லஞ்சப் புகார்… பைல்களை முடக்கி அதிகாரிகளின் புது டெக்னிக்… முதல்வர் விஜய்க்கு முட்டுக்கட்டை போடும் சிவப்பு நாடா முறை..!!
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பின்னரும், அரசு அலுவலகங்களில் லஞ்சப் புழக்கம் முழுமையாக நின்றுவிடவில்லை என்று பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் குமுறுகின்றனர். லஞ்சப் புகார்களில் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தால் பல அதிகாரிகள் இப்போது நேரடியாகப் பணம் வாங்க அஞ்சினாலும், கோப்புகளை நகர்த்தாமல் வாரக்கணக்கில் இழுத்தடிப்பதாகப் புகார்கள் எழுகின்றன. ‘இந்தியன்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் கூறுவது போல, போக்குவரத்துச் செலவு மற்றும் விடுப்புச் சம்பள இழப்பை விட லஞ்சம் கொடுப்பது ‘மலிவானது’ என்று மக்கள் கருதும் அளவிற்கு, முறையான வழியில் செல்லும்போது நாட்கணக்கில் அலைய வேண்டியிருப்பதாகப் பொதுமக்கள் புலம்புகின்றனர்.
சரியான ஆவணங்களுடன் விண்ணப்பித்தாலும் டிடிசிபி அப்ரூவல், பத்திரப்பதிவு, பட்டா மாற்றம் போன்ற வேலைகளுக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே உடனே முடியும் என்ற தவறான நம்பிக்கை இங்கு காலம் காலமாக விதைக்கப்பட்டுள்ளது. நமக்கு முன்னால் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கும்போது, நமது கோப்பை மட்டும் முன்னுரிமை கொடுத்து முடிக்க வேண்டும் என்று மக்களே வலியப் போய் லஞ்சம் கொடுப்பதும், அதற்கு அரசு ஊழியர்கள் பழகிப்போனதும் தான் இந்த ‘சிஸ்டத்தின்’ சாபக்கேடாகும். அரசு மருத்துவமனைகள் முதல், டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக வசூலிக்கப்படும் பத்து ரூபாய் வரை, விஏஓ முதல் தாசில்தார் அலுவலகங்கள் வரை லஞ்சம் என்பது ஒரு மறைமுக சிஸ்டமாகவே வேரூன்றிக் கிடக்கிறது.
திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் இந்த ‘சிஸ்டம் சரியில்லை’ என்று விமர்சித்துவிட்டு, அதனை மாற்றியே தீருவேன் என்று அரசியலுக்கு வந்த முதல்வர் விஜய் நினைத்தாலும், இந்த அமைப்பை அடியோடு மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. வெறும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளால் மட்டும் இதனைச் சரிசெய்துவிட முடியாது; அதற்குப் பதிலாகப் பணிகளின் வேகத்தை அதிகரிக்கும் வெளிப்படையான மாற்று தொழில்நுட்ப முறைகளையும், ‘சிவப்பு நாடா’ (Red Tapism) முறையை ஒழிக்கும் புதிய சிஸ்டத்தையும் அரசு கொண்டு வர வேண்டும். இல்லையெனில், லஞ்சத்தை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் ஓட்டைக் குடத்தில் தண்ணீர் ஊற்றுவதற்குச் சமமாகவே முடியும் என்பது கசப்பான உண்மையாகும்.
