LATEST NEWS
“கட்டாயமாகச் சோறு ஊட்டுங்கள்!”.. சமூக ஆர்வலரின் உயிரைக் காக்க நீதிமன்றக் கதவைத் தட்டிய பொதுநல மனு.. தீர்ப்பு என்ன?.. பரபரக்கும் பின்னணி..!!
நீட் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லடாக்கைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் நேரடியாகப் பங்கேற்றுத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்றுடன் அவரது உண்ணாவிரதப் போராட்டம் 18-வது நாளை எட்டிய நிலையில், அவர் உடல் நலிவடைந்து மிகவும் சோர்வுடன் காணப்படுகிறார். இதுவரை 8½ கிலோ வரை உடல் எடை குறைந்துள்ள அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக மாறியுள்ளது.
இந்தச் சூழலில், சோனம் வாங்க்சுக்கின் உயிரைக் காக்கும் பொருட்டு அவருக்குக் ‘கட்டாயமாக உணவளிக்க’ உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சோனம் வாங்க்சுக்கின் உடல்நிலை குறித்து அரசு எந்தவித அக்கறையுமின்றி உணர்வற்ற நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த மனுவில், அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர்வாழத் தேவையான சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய திரவ உணவைக் கட்டாயமாக ஊட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் இரண்டு நாட்களில் அவர் உயிரிழக்க நேரிடும் என்ற அபாய எச்சரிக்கையோடு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
