LATEST NEWS
மீண்டும் ஒரு கடல் விபத்து!.. லிபியா அருகே அகதிகள் படகு விபத்து.. 50 பேரின் கதி என்ன?.. நெஞ்சை பிசையும் பின்னணி..!!
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சுமார் 60 அகதிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பா நோக்கிப் புறப்பட்ட படகு ஒன்று, லிபியாவின் கிழக்குக் கடலோர நகரான தோப்ருக் அருகே உள்ள பர்தா தீவுக்கு அருகில் கவிழ்ந்து கொடூர விபத்துக்குள்ளானது. இந்தச் சோகமான சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்படக் குறைந்தது 50 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் அல்லது மாயமாகியுள்ளனர். அவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று லிபிய கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கியவர்களில் 10 பேர் மட்டுமே நீந்திப் பர்தா தீவை அடைந்து உயிர் தப்பிய நிலையில், கடலில் மாயமான மற்றவர்களைத் தேடும் பணிகளைத் தீவிரம் அடைந்துள்ளன.
கடந்த 2011-ல் அதிபர் கடாபி வீழ்த்தப்பட்ட பிறகு லிபியாவில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களையும், உள்நாட்டுக் கலவரங்களையும் மனிதக் கடத்தல்காரர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். வறுமை மற்றும் போர் காரணமாக அகதிகளாக ஓடிவருபவர்களிடம் பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு, தகுதியற்ற பலவீனமான சிறிய படகுகளில் நூற்றுக்கணக்கில் அடைத்து ஆபத்தான முறையில் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவிற்கு அனுப்பி வைக்கின்றனர். சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் தரவுகளின்படி, மத்திய தரைக்கடல் பகுதியில் கடந்த ஆண்டு 1,300-க்கும் அதிகமான அகதிகளும், இந்த ஆண்டின் ஒரு சில மாதங்களிலேயே 800-க்கும் மேற்பட்ட அகதிகளும் உயிரிழந்தோ அல்லது மாயமாகியோ இருப்பது அகதிகள் பயணத்தின் பேராபத்தை உணர்த்துகிறது.
