CRIME
நெஞ்சை பதறவைக்கும் நள்ளிரவுப் படுகொலை..! நண்பனின்கழுத்தை அறுத்து.. உடலைச் சிதைத்து வீடியோ எடுத்த கொடூரர்கள்… உறைந்துபோன தானே..!!!
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் மும்பரா பகுதியில் உள்ள கர்தி கிராமத்தில், தலை மற்றும் இரண்டு கைகளும் இல்லாத நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பலியான நபர் யார் என்பதை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு கடும் சவாலாக இருந்தது. உடலைக் கைப்பற்றிய மும்பரா போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். வழக்கின் தீவிரம் காரணமாக இந்த வழக்கு உல்லாஸ்நகர் குற்றப்பிரிவு பிரிவு-4 போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குற்றப்பிரிவு போலீசார் சந்தேகத்தின் பேரில் ஃபெய்ஸ் சுல்தான் மாலிக் மற்றும் அல்பான் சுல்தான் மாலிக் ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரும் சேர்ந்து தங்களது நண்பரான அமன் முஸ்கின் ஷேக் என்பவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். கடந்த மார்ச் 13 ஆம் தேதியன்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, அமனை ஆட்டோவில் ஒரு வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்துச் சென்று, கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது அடையாளத்தை மறைப்பதற்காகத் தலையையும், இரு கைகளையும் துண்டித்துக் கர்தி கிராமத்தில் உடலை வீசியுள்ளனர்.
இந்தக் கொடூரக் கொலையின் போது, குற்றவாளிகள் தங்களது மொபைல் போனில் கொலையை முழுமையாக வீடியோவாகப் பதிவு செய்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த மொபைல் போனை முக்கிய ஆதாரமாகப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அதை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். குற்றப்பிரிவு டிசிபி அமர்சிங் ஜாதவ் கூறுகையில், கொலையுண்ட அமன் மீது பைக் திருட்டு வழக்கு இருந்ததாகவும், முக்கியக் குற்றவாளியான ஃபெய்ஸ் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது கொலையாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், அமனின் துண்டிக்கப்பட்ட தலையைத் தேடி வருகின்றனர்.
