CRIME
கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச்… குழந்தைக்கு முன்பே கத்தியால் வெட்டிக் கொலை..! சிசிடிவி-யில் சிக்கிய மனைவியின் கொடூர முகம்..!!!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், அமாவாசை வழிபாட்டிற்காகக் கோவிலுக்குச் சென்ற கணவரை, அவரது மனைவியும் அவளது கள்ளக்காதலனும் சேர்ந்து மிகக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த 23 வயதான ரமேஷ் என்ற வாலிபர், ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்குச் சாந்திபுரத்தைச் சேர்ந்த 19 வயதான ஹாசினி என்ற பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. வெளியே பார்ப்பதற்கு இந்தத் தம்பதியினர் சாதாரணமாக வாழ்ந்து வந்தாலும், ஹாசினி தனது சிறுவயது நண்பரான யுகந்தர் என்பவருடன் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இருவரும் சேர்ந்து ரமேஷை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
திட்டத்தின்படி, கணவர் ரமேஷை மல்லப்பா கொண்டா பகுதியில் உள்ள ஸ்ரீ மல்லேஸ்வர சுவாமி கோவிலுக்குச் செல்லுமாறு ஹாசினி வற்புறுத்தி அழைத்துள்ளார். அதன்படி ரமேஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்குப் புறப்பட்டுள்ளார். அவர்கள் பயணிக்கும் போது, ஹாசினி தனது மொபைல் போன் மூலம் கணவருக்குத் தெரியாமல் தங்களுடைய தற்போதைய இருப்பிடத்தை கள்ளக்காதலன் யுகந்தருக்குத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டே வந்துள்ளார். மலைப்பாதையின் மூன்றாவது கொண்டைஊசி வளைவு அருகே வந்தபோது, ஹாசினி திட்டமிட்டே தனது கைப்பையை கீழே போட்டுள்ளார். அதை எடுப்பதற்காக ரமேஷ் வண்டியை நிறுத்திய சமயம் பார்த்து, அங்கே மறைந்திருந்த யுகந்தரும் அவனது கூட்டாளிகளும் ரமேஷைத் துரத்திச் சென்று, அருகில் இருந்த காட்டுப்பகுதிக்குள் வைத்து குழந்தைக்கு முன்பாகவே கத்தியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
கோவிலுக்குச் சென்ற மகளும் பேத்தியும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், ஹாசினியின் தாய் காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளார். இதனையடுத்துப் போலீஸார் அந்தப் பாதையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ரமேஷ் தனது மனைவியுடன் கோவிலுக்குச் சென்றதும், ஆனால் திரும்பி வரும்போது ஹாசினி இரண்டு மர்ம நபர்களுடன் ரமேஷின் பைக்கில் சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செல்போன் எண்கள் மற்றும் இருப்பிடத் தரவுகளை ஆய்வு செய்த போலீஸார், ரமேஷின் உடலைக் கைப்பற்றியதுடன், அவரது மனைவி ஹாசினி, கள்ளக்காதலன் யுகந்தர் மற்றும் கொலைக்கு உதவிய இரு கூட்டாளிகளையும் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். மேலும், இவர்களது திருமணம் நடந்தபோது ஹாசினி 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மைனர் பெண்ணாக இருந்தாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
