CINEMA
FLASH: “என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம்” நீட் போராட்ட மாணவர்களுக்காக நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவு..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்த ஆண்டு தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று (ஜூலை 23) தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு, ரசிகர்களும் திரைத்துறையினரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வரும் வேளையில் அவர் இந்த அதிரடி முடிவை அறிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்திரில் மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கும், அவர்களின் மனநிலைக்கும் மதிப்பளிக்கும் வகையில், தனது பிறந்தநாளை ஆடம்பரமாகவோ அல்லது எந்த ஒரு வடிவத்திலோ கொண்டாட வேண்டாம் என்று சூர்யா நற்பணி மன்றத் தலைமை மூலம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1997-ல் ‘நேருக்கு நேர்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமீபத்திய ‘கருப்பு’ படம் வரை பல பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்துள்ள சூர்யா, அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள ‘விஸ்வநாதன் அண்ட் சண்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இத்தகைய சூழலில், திரைப்பட வெற்றிகளைக் கடந்து மாணவர்களின் கல்விப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர் எடுத்துள்ள இந்த முடிவு சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
