LATEST NEWS
“இது என்ன ஜனநாயகமா… அடக்குமுறையா..?!” உதயநிதி கைதால் பொங்கிய பிரேமலதா விஜயகாந்த்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளுக்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குக் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது அடிப்படை உரிமை என்றும், கருத்துக்குக் கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயக மாண்பு என்றும் குறிப்பிட்டுள்ள அவர், கைது நடவடிக்கையே தீர்வாகக் கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதல்ல எனத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திர இந்தியாவில் கருத்துத் தெரிவித்ததற்காக கைது நடவடிக்கை போன்ற அடக்குமுறைகளைப் பயன்படுத்துவது மக்களிடையே ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைக் குறைக்கும் என்று கூறியுள்ள பிரேமலதா, ஆளுங்கட்சியினருக்கு இருக்கும் கருத்துச் சுதந்திரம் எதிர்க்கட்சியினருக்கும் உண்டு என்றார். மேலும், ராணிப்பேட்டையில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறை, எதிர்க்கட்சியினர் கருத்துத் தெரிவித்தவுடன் உடனடியாகக் கைது செய்வது சட்டத்தின் சமநிலையான அமலாக்கம் குறித்த கேள்விகளை எழுப்புவதாகச் சாடியுள்ளார்.
நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது அரசியல் நாகரிகத்திற்குப் பொருந்தாத செயல் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே, ஜனநாயக மரபுகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதித்து, அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கைது நடவடிக்கைகள் மூலம் கையாளும் போக்கை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
