LATEST NEWS
“வாய திறக்க வக்கற்ற தவெக அரசு..!” உதயநிதி கைதால் ஆவேசத்தின் உச்சத்தில் திமுக தலைமை.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்..!!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட கண்டித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரிப் பிரச்சினைக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசு மீது முன்வைக்கப்பட்ட எந்தவொரு விமர்சனத்திற்கும் பதில் சொல்ல முடியாமல், தன் கையாலாகாத்தனத்தை மறைக்கவே இத்தகைய பொய்வழக்கைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யார் பெயரையும் குறிப்பிடாமல் பேசிய உரையை ‘ஆபாசமாகப் பேசினார்’, ‘இரட்டை அர்த்தத்தில் பேசினார்’ எனத் திரிப்பதாகக் குறிப்பிட்டுள்ள திமுக, தவெக அரசு பொய் வழக்குகள் மூலம் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாகச் சாடியுள்ளது.
தவெக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் கடந்த காலப் பேச்சுக்களைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக, திரைப்படங்களில் கெட்ட வார்த்தைகளைப் பேசிய தவெக தலைவர் விஜய்யும், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர்களும் திடீரென ‘ஆபாச எதிர்ப்புப் போராளிகளாக’ அவதாரம் எடுத்து நாடகமாடுவதாகக் கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், சொந்தக் கட்சியினர் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, எதிர்க்கட்சித் தலைவரை மட்டும் குறிவைத்து அவசர அவசரமாகக் கைது நடவடிக்கைகளை ஏவி விட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் மேகதாது அணை தொடர்பான நிலைப்பாடு, டெல்லியில் விவசாயிகள் கைது செய்யப்பட்டது மற்றும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கத் துணியாத தவெக அரசு, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக மட்டும் வீரியமாகச் செயல்படுவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல், தன் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ சரவணன் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும் நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத அரசு, மக்கள் நலப் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே உதயநிதி ஸ்டாலின் மீது இத்தகைய அவசர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்றும் சாடியுள்ளது.
நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பப்போகும் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த பாசிசக் கைது நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளதாக திமுக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எத்தனையோ சிறைச்சாலைச் சித்திரவதைகளையும் ஒடுக்குமுறைகளையும் கண்டு கடந்து வந்த இயக்கம் திமுக என்றும், இத்தகைய கைது நடவடிக்கைகளால் இளைஞரணிச் செயலாளரையோ அல்லது இயக்கத்தையோ ஒருபோதும் முடக்கிவிட முடியாது எனவும், தவெக அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம் என்றும் அந்த அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
