LATEST NEWS
“என் புருஷன் உயிரோடுதான் இருக்கார்” செத்துட்டாருனு பொய் சொல்றாங்க… ஓமனில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட மாலுமி… உச்சநீதிமன்றதை மிரள வைத்த மனைவி..!!
ஆரம்பகட்ட ஈரான் போரின்போது ஓமன் வளைகுடாவில் நங்கூரமிட்டிருந்த ‘ஸ்கை லைட்’ என்ற எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒமன் காசப் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அந்த எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பணியாற்றிய இந்திய வணிகக் கடற்படை கேப்டன் ஆஷிஷ் குமார் உயிரிழந்துவிட்டதாகக் கருதப்பட்டது. இச்சம்பவத்தின்போது கப்பலில் இருந்த 10 இந்திய மாலுமிகளிள் 8 பேரை ஓமன் அதிகாரிகள் மீட்டனர். ஆனால் எஞ்சின் அறையில் இருந்த கேப்டன் குமார் மற்றும் மாலுமி தலிப் ஆகிய இருவரும் காணாமல் போயினர். பின்னர் கேப்டனின் அறையில் எரிந்த நிலையில் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அது கேப்டன் குமாருடையதாக இருக்கலாம் என்றும் தூதரகம் தெரிவித்திருந்தது.
ஆனால், கேப்டன் குமார் உயிருடன் தான் இருக்கிறார் என்றும், அவர் வெளிநாட்டு நபர்களால் சட்டவிரோதமாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறி அவரது மனைவி அன்ஷு உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்குப் பிறகும் தனது கணவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பிய குறுஞ்செய்தி சென்றடைந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த மார்ச் 4 அன்று சர்வதேச மற்றும் உள்நாட்டு எண்களிலிருந்து தனக்கு அழைப்புகள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதில் தனது கணவர் தங்களது பாதுகாப்பில் உயிருடன் இருப்பதாகவும், அவரை விடுவிக்க ரூ.20 லட்சம் கப்பத்தொகை தர வேண்டும் என்றும் அச்சுறுத்தியதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, மீட்கப்பட்ட உடல் பாகங்களின் டி.என்.ஏ மாதிரி, கேப்டனின் தம்பியின் டி.என்.ஏ உடன் ஒத்துப்போகவில்லை என்ற அறிக்கையை ஓமன் காவல்துறை வெளியிட்டிருந்தது. இதையும், தங்களுக்கு மே 15 அன்று கிடைத்த தூதரகத் தகவலையும் சுட்டிக்காட்டியுள்ள அவரது குடும்பத்தினர், ஓமன் அதிகாரிகள் மீட்ட எலும்புத் துண்டுகள் கேப்டன் குமாருடையது அல்ல என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர். இதன் அடிப்படையில், இந்திய வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் தங்களின் தூதரக மற்றும் உளவுத்துறை வழிகளைப் பயன்படுத்தி கேப்டன் ஆஷிஷ் குமாரைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அவரது மனைவி தனது மனுவில் கோரியுள்ளார்.
