LATEST NEWS
“சந்தையில் காய்கறி வாங்குவது போல காசு கொடுத்து ஓட்டு வாங்கினீங்க” ஆனா நாங்க… எதிர்க்கட்சிகளை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தின் தேர்தல் அரசியலில் நிலவி வந்த வாக்குக்குக் காசு கொடுக்கும் கலாச்சாரம் குறித்து மிகக் காரசாரமாகப் பேசினார். “தமிழகத்தில் காசு கொடுத்து ஓட்டு வாங்கும் சீரழிந்த அரசியலுக்கு ஒட்டுமொத்தமாக முடிவு கட்டியவர் நமது முதலமைச்சர் விஜய்” என்று பேரவையில் அவர் மிக அழுத்தமாகப் பதிவு செய்தார்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் தேர்தல் யுத்திகளை கடுமையாகச் சாடிய அவர், “இங்குள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் சந்தையில் காசு கொடுத்துக் காய்கறி வாங்குவது போல, மக்களின் வாக்குகளைப் பணம் கொடுத்து மிகச் சாதாரணமாக வாங்கினார்கள்” என்று குற்றம் சாட்டினார். ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தினர் யாரும் ஓட்டுக்காக மக்களுக்கு ஒரு பைசா கூட பணம் கொடுக்கவில்லை என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இறுதியாக, தமிழக தேர்தல் வரலாற்றில் தவெக ஏற்படுத்திய மாற்றத்தைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வாக்குகளுக்குப் பணம் கொடுக்கும் மோசமான கலாச்சாரத்தை ஒழித்துக் கட்டிய பெருமை முதலமைச்சர் விஜய்யையே சேரும் என்றார். நேர்மையான முறையில் தேர்தலைச் சந்தித்து, மக்கள் மத்தியில் ஒரு புதிய அரசியல் விழிப்புணர்வையும், பெரும் புரட்சியையும் தவெக அரசு ஏற்படுத்தியுள்ளது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
