LATEST NEWS
“தக்காளி கெட்டாலும் அடிப்பாரு…” வங்கி அதிகாரி திவ்யா மிஸ்ரா கொலையில் கணவரின் கொடூரம் அம்பலம்..! CCTV காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சகோதரி பிரக்யா மிஸ்ரா..!!
லக்னோ கோமதி நகரில் நடந்த வங்கி அதிகாரி திவ்யா மிஸ்ரா கொலை வழக்கில், அவருடைய சகோதரியும் பத்திரிகையாளருமான பிரக்யா மிஸ்ரா சமூக வலைதளத்தில் CCTV காட்சிகளைப் பகிர்ந்து பல பரபரப்பான மற்றும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். திவ்யா கொலை செய்யப்படுவதற்கு முன்பும், சம்பவ இடத்தைச் சுற்றிலும் பதிவான CCTV காட்சிகளில், திவ்யா கேப் மூலமாக அலுவலகத்திற்குச் செல்வது தெளிவாகத் தெரிகிறது. மற்றொரு காட்சியில், வங்கிக்கு வெளியே தாக்குதல் நடந்தபோது சுற்றியிருந்த மக்கள் பீதியடைந்து நாலாப்புறமும் சிதறி ஓடுவதும், கணவர் மானஸ் பாஜ்பாய் திவ்யாவைத் தாக்கும் கொடூரமான தருணங்களும் பதிவாகியுள்ளன. இந்த வழக்கில் முழு உண்மையையும் வெளியே கொண்டு வர காவல்துறையினர் அனைத்து CCTV காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று பிரக்யா வலியுறுத்தியுள்ளார்.
மானஸ் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், கொலைக்கான காரணங்கள் திவ்யாவின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தெரியும் எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்கு பிரக்யா மிஸ்ரா பதிலளித்துள்ளார். திவ்யாவின் திருமண வாழ்க்கையில் நடந்த கொடுமைகளும், மானஸ் அவரைத் தொடர்ந்து தாக்கி வந்ததும் குடும்பத்திற்குத் தெரிந்திருந்தது என்பதை அவர் ஒப்புக் கொண்டார். ஆன்லைனில் ஆர்டர் செய்த தக்காளி கெட்டுப்போயிருந்தால் கூட, அதற்காகத் திவ்யாவை மானஸ் கடுமையாகத் தாக்குவார் என்றும், குடும்ப நீதிமன்றத்தில் கவுன்சிலிங் நடந்தபோதும் கூட மானஸ் தகராறில் ஈடுபட்டார் என்றும் பிரக்யா குற்றம்சாட்டியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு செலவுகளைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக மானஸ் உருவாக்கிய விதிமுறைகளை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட திவ்யா, பின்னர் பணம் தருவதை நிறுத்தியதால் மானஸ் அவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
குடும்பத்தில் இத்தனை துன்பங்கள் இருந்தபோதிலும், கணவன் என்றாவது திருந்தி விடுவான் என்ற நம்பிக்கையில் திவ்யா தனது கையிலிருந்த மானஸின் பெயர் பொறித்த பச்சையைக் கூட அழிக்காமல் வைத்திருந்தார் என்றும், தீஜ் பண்டிகைக்கான விரதத்தைக் கூட கடைபிடிக்கத் திட்டமிட்டிருந்தார் என்றும் பிரக்யா வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு மானஸ் திவ்யாவைப் பின்தொடர்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில் திவ்யா விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்ததாகவும், காயங்கள் முழுமையாகக் குணமடையாத நிலையிலும் சம்பவம் நடந்த நாளன்று நொண்டியபடியே பணிக்குச் சென்றதாகவும் கூறினார். காரை ஓட்டத் தெரியாத மானஸ், ஆட்டோவில் வந்து இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியதால், அந்த ஆட்டோ ஓட்டுநரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் 3 ரிவால்வர்கள் அவரிடம் எப்படி வந்தது, அதை அவருக்கு யார் வழங்கியது என்றும் காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும் எனப் பிரக்யா மிஸ்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.
