LATEST NEWS
மஹந்த், மக்கள் சபை, அரசு எல்லாரும் ஓரம்போங்க..! காச்ரோத் ராமர் கோயில் நிலம் கடவுளுக்கே சொந்தம்…! 70 ஆண்டு கால கோயில் சொத்துப் பிரச்சனைக்கு… உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் காச்ரோத் பகுதியில் அமைந்துள்ள கோயில் ஒன்றின் சொத்து தொடர்பான சுமார் 70 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு இந்தூர் உயர்நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ ராமர் சிலையே அந்த கோயில் சொத்துக்களின் உண்மையான உரிமையாளராகக் கருதப்படும் என்று நீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்துள்ளது. மேலும், கோயிலைச் சார்ந்த சொத்துக்கள் அனைத்தும் ஆன்மீக மற்றும் பொது நல நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளதன் மூலம் கோயில் சொத்துக்களின் உரிமையியல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் சொத்து தொடர்பான விவாதம் முதன்முதலில் 1954 ஆம் ஆண்டில் தொடங்கியது. கோயிலின் மஹந்த், மகேஸ்வரி சமூகம் மற்றும் மாநில அரசு ஆகிய மூன்று தரப்பினருக்கும் இடையே சொத்து உரிமை தொடர்பாக கருத்து வேறுபாடுகள் எழுந்தன. ஒவ்வொரு தரப்பும் கோயில் மற்றும் அதற்குச் சொந்தமான நிலங்கள் மீது தங்களுக்கு உரிமை உண்டு என வாதிட்டன. பிரச்சனை தீவிரமடைந்ததை அடுத்து வழக்கு நீதிமன்றத்தை அடைந்தது. 1968 ஆம் ஆண்டில் இது தொடர்பாக இந்தூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஏழு தசாப்தங்களாக இந்த வழக்கு பல கட்ட விசாரணைகளைக் கடந்து, பல்வேறு ஆவணங்கள் மற்றும் வாதங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, வழக்கை விசாரித்த இந்தூர் உயர்நீதிமன்ற நீதிபதி வினய் சரஃப் இந்த தீர்ப்பை வழங்கினார். மஹந்த், மகேஸ்வரி சமூகம் மற்றும் அரசு ஆகிய மூன்று தரப்பினரின் கோரிக்கைகளையும் நிராகரித்த நீதிமன்றம், கோயிலில் உள்ள ராமர் சிலையே சொத்தின் உண்மையான உரிமையாளர் என்பதை உறுதி செய்தது. சுமார் 70 ஆண்டுகள் கழித்து வந்துள்ள இந்த தீர்ப்பு, ஆன்மீக நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சொத்துக்களைப் பொதுப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவது தொடர்பான சட்ட அம்சங்களில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
