LATEST NEWS
குடிச்சுட்டு அடிச்சாலும்… என்னைக் காப்பாற்றுவது அவன்தான் சார்… ரூ.2,000-க்காக பெற்ற தாயை நடுரோட்டில் அடித்த கொடூரம்… ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல அந்த தாய் சொன்ன வார்த்தை இருக்கே..! கண்ணீரை வரவழைக்கும் தாய் பாசம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ராஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் விஹார் காலனியில், பணத் தகராறு காரணமாக மகன் ஒருவன் தனது 75 வயது முதிய தாயை நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆகஸ்ட் 7 அன்று காலை, 75 வயதான மித்ரா விஸ்வகர்மா என்பவர் வீட்டை விட்டு வெளியே சென்றபோது, அவருடைய மகன் ராஜு விஸ்வகர்மா அவரைத் துரத்திப் பிடித்து, தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளார். சுமார் ரூ.2,000 பணப் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் ராஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் தப்பியோடிய மகனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்ட காவல்துறை, பாதிக்கப்பட்ட முதிய தாயை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மகன் மீது புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், தனது மகன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு அவன் சிறைக்குச் செல்ல நேரிடும் என்பதை அறிந்த தாய், தன் மகன் மீது எந்தவொரு புகாரும் கொடுக்க முடியாது என மறுத்துவிட்டார்.
காவல்துறையினரிடம் பேசிய தாய் மித்ரா விஸ்வகர்மா, “என் மகன் மது குடித்துவிட்டு பணத்துக்காக சண்டை போடுவதும் திட்டவதும் உண்மைதான்; ஆனால் எனக்கு உடம்பு சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பராமரிப்பவனும் அவன்தான்” என்று கூறி மகனைப் பாதுகாத்தார். அக்கம் பக்கத்தினர் தங்களுக்குள் இருக்கும் தகராறைப் பெரிதாக்க முயல்வதாகவும், தன் மகன் சிறைக்குச் செல்வதை தான் ஒருபோதும் விரும்பவில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார். இதையடுத்து, காவல்துறையினர் மகனை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, தாயை மீண்டும் இதுபோன்ற கொடுமைக்கு ஆளாக்கக் கூடாது என கடுமையாக எச்சரித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
