LATEST NEWS
சிறுமிகள் விஷயத்தை வச்சு அரசியல் பண்ணாதீங்க… யாரையும் காப்பாத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்ல.. ஜெம் வீரமணி வழக்கில் கொந்தளித்த ஸ்டாலின்..!!
ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் திமுக மீது பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாகப் பரப்புவதை ஆளுங்கட்சியினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இத்தகைய இழிவான செயல்களில் ஈடுபட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எத்தகைய உயர் பொறுப்பில் இருந்தாலும் தப்பிக்கக் கூடாது என்றும், அவர்களுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே தங்களின் தெளிவான நிலைப்பாடு என்றும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்ற குற்ற வழக்குகளில் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனுக்குடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். “எவரையும் காப்பாற்ற வேண்டிய எந்தவொரு அவசியமும் எங்களது ஆட்சிக்கு இருந்ததில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்குத் தகுந்த தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்ட அவர், இவையனைத்தும் பொதுவெளியில் இருக்கும் மறுக்க முடியாத உண்மைகள் என்றும் பதிவிட்டுள்ளார்.
தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அரசியல் லாபம் அடைவதற்காகவே, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை ஆளுங்கட்சியினர் ஒரு தேர்தல் கருவியாகப் பயன்படுத்தி வருவதாக ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், கட்சி நிர்வாகிகள் மீதே பெண்கள் பகிரங்கமாகப் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிறகும், நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள்தான் நடக்கின்றன என்று விமர்சித்த அவர், அரசியல் குளிர்காய்வதை விடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே அனைவரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்
