LATEST NEWS
இமயமலையில் அடுத்த ஆபத்து..! “நேபாளத்தில் 2-வது முறையாகப் பெருவெள்ளம் வரலாம்” விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்..!!
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அங்கு இரண்டாவது முறையாகப் பெருவெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக காத்மாண்டுவைச் சேர்ந்த பன்னாட்டு மலைவள மேம்பாட்டு மையம் (ICIMOD) எச்சரித்துள்ளது. நேபாள-சீன எல்லைப் பகுதியில் உள்ள பனியாற்றில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவின் காரணமாக, அங்குள்ள லெண்டே ஆற்றில் இன்னும் ஒரு பெரும் பனிப்பாறை அடைப்பு நீடிப்பதைக் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தத் தற்காலிக இயற்கை அணை போன்ற அடைப்பு எந்நேரமும் உடையலாம் என்பதால், அப்பகுதியில் மீண்டும் ஒரு பேரிடர் நிகழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
திபெத் எல்லை அருகே ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பனிப்பாறைகள் உடைந்து சரிந்து ஆற்று நீரோட்டத்தைத் தடுத்ததே இந்த திடீர் வெள்ளத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. பின்னர் தேங்கிய நீர் ஒரே நேரத்தில் அழுத்தத்துடன் உடைந்ததால், போதே கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் நீர்மட்டம் சில நிமிடங்களிலேயே 7 முதல் 9 மீட்டர் வரை அபாயகரமாக உயர்ந்தது. தற்போதும் நீடித்து வரும் இந்த பனிப்பாறை அடைப்பு காரணமாக, எல்லையில் உள்ள ஜிலாங் துறைமுகப் பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கான அவசர உத்தரவுகளை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த முதற்கட்ட வெள்ளத்தில் சிக்கி 95 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன 400-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர்களில் 105 இந்தியர்களும், குறிப்பாக 37 தமிழர்களும் அடங்குவர். அடுத்தடுத்து நிகழும் இந்த பனிப்பாறைச் சரிவுகள் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்துவதாகவும், எல்லை தாண்டிய இத்தகைய பேரிடர்களை எதிர்கொள்ள நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
