LATEST NEWS
எவ்வளவு பெரிய கியூ இருந்தாலும் பரவாயில்லை… நாங்க இவர்கிட்டதான் பெட்ரோல் போடுவோம்..! அப்படி என்னதான் ஸ்பெஷல்..? இணையத்தை உருக வைத்த சூரத் பெட்ரோல் பங்க் ஊழியரின் வைரல் வீடியோ..!!
ஒரு மனிதனின் அடையாளம் அவரது குரலால் மட்டுமல்ல, அவரின் உழைப்பாலும் நடத்தையாலும் தீர்மானிக்கப்படுகிறது என்பதை குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஒரு நபர் நிருபித்துள்ளார். பேசும் மற்றும் கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளியான இந்த ஊழியர், கடந்த 23 ஆண்டுகளாகச் சூரத்திலுள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மிகவும் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும், பொறுப்புடனும் பணியாற்றி வருகிறார். இவரின் இந்த அசைக்க முடியாத உழைப்பும் நற்பண்பும் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. ‘கெம் சோ சூரத்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரைப் பற்றிய வீடியோ பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பலரும் இவருக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் மற்றும் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள், கடந்த 23 ஆண்டுகளில் இவர் மீது ஒரு சிறு புகார் கூட வந்தது இல்லை என்று மிகவும் பெருமையுடன் கூறுகின்றனர். அங்கு வரும் பல வாடிக்கையாளர்கள், பங்க்கில் எவ்வளவு பெரிய வரிசை இருந்தாலும் சகித்துக் கொண்டு, இவரிடமே பெட்ரோல் நிரப்ப விருப்பப்படுகின்றனர். பேசவும் கேட்கவும் இயலாவிட்டாலும், வாடிக்கையாளர்களிடம் தொடர்புகொள்ள அவர் ஒரு எளிய முறையைக் கையாண்டு வருகிறார். அங்கு வைக்கப்பட்டுள்ள ஒரு போர்டில் ரூ.10, ரூ.20, ரூ.50 முதல் ரூ.20,000 வரையிலான தொகைகள் எழுதப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான தொகையைச் சுட்டிக்காட்ட, இவரும் அதைச் சைகை மூலம் புரிந்து கொண்டு துல்லியமாகப் பெட்ரோல் நிரப்பித் தருகிறார்.
https://www.instagram.com/reel/DcfuxlkxSM3/?utm_source=ig_web_button_share_sheet
இவரது இந்த சாமர்த்தியமான வேலை செய்யும் விதத்தையும் புரிதலையும் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். எந்தவொரு புகாரும் சலிப்பும் இன்றி இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து உழைப்பதே இவரிடமுள்ள மிகப்பெரிய சிறப்பு என்று மக்கள் புகழ்கின்றனர். ‘கெம் சோ சூரத்’ வெளியிட்டுள்ள பதிவில், இவரின் 23 ஆண்டுகால நேர்மை, உழைப்பு மற்றும் மரியாதைக்குச் சிரம்தாழ்த்தி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. “பேச முடியாத மனிதர்களிடமும் சொல்வதற்குக் உலகின் மிகச் சிறந்த கதைகள் ஒளிந்திருக்கின்றன” என்பதை இந்த ஊழியரின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
