LATEST NEWS
தலைவனுக்கே ஒன்னும் தெரியாது… நடிகனுக்கு அடிமையாகி அமைச்சரானவர்களுக்கு அறிவு வந்துவிடுமா என்ன..? தவெக அரசை கடுமையாக விமர்சித்த இசையமைப்பாளர்..!!
தமிழக வெற்றிக் கழக அரசு, சென்னைக்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாக்கும் நோக்கிலும், மக்களின் தொடர் போராட்டங்களுக்கு மதிப்பளித்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் தெரிவித்தார். அரசின் இந்த அறிவிப்புக்குத் திட்டப் பகுதியான ஏகனாபுரம் கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிப் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
அதே நேரத்தில், தவெக அரசின் இந்த அதிரடி முடிவுக்குத் தமிழகத்தின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சி சார்ந்த வட்டாரங்களில் இருந்து கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. இத்திட்டத்தை ரத்து செய்தது தமிழ்நாட்டின் எதிர்கால உட்கட்டமைப்பு முதலீடுகளையும், சர்வதேச அளவிலான வான்வழிப் போக்குவரத்துத் தேவைகளையும் பல்லாண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிடும் எனப் பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தச் சூழலில், பிரபல இசையமைப்பாளரும் ஊடகவியலாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தவெக அரசையும் அதன் அமைச்சர்களையும் மிகக் காரசாரமாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். “திரைப்பட நடிகனுக்கு அடிமையாகி கட்-அவுட் வைத்து கொண்டாடியவர்களை எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக்கினால் திடீரென அரசியல், பொருளாதார அறிவு வந்துவிடுமா? தலைவனுக்கே ஒன்றும் தெரியாதபோது இந்தக் கூட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமா?” என்று அவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் தற்பொழுது இணையதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
