LATEST NEWS
நேபாளத்தில் உச்சக்கட்ட பீதி..! உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு..! பேரழிவின் நடுவே உயிரைப் பணயம் வைத்து நடக்கும் மீட்புப் போர்..!!
திபெத் எல்லையையொட்டி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. திபெத் பகுதியிலிருந்து பாய்ந்து வந்த வெள்ள நீர், காலை 9 மணியளவில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கலந்து டிமுரே மற்றும் சியாப்ரு பெசி ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் சேதங்களை மதிப்பிடுவதிலும், ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கான மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும் நிலவரத்தை ஆய்வு செய்வதற்கும் நேபாள பிரதமர் பாலன் ஷா அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த நேபாள ராணுவம், ஆயுதக் காவல் படை மற்றும் காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் படுகைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 46 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அதிகாரிகளால் சேதத்தின் முழு அளவு மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. காணாமல் போனவர்களைக் கண்டறிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
