LATEST NEWS
உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா..? சக்கர நாற்காலியில் இருந்த மாற்றுத்திறனாளியிடம் பட்டப்பகலில் வழிப்பறி – வைரலாகும் சிசிடிவி காட்சி…!!
பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரில் மாற்றுத்திறனாளி நபர் ஒருவரிடம் இருந்து பட்டப்பகலில் மர்ம நபர்கள் இருவர் பணப்பையை பறித்துச் சென்ற கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜிராக்பூரின் பாலம என்கிளேவ் குடியிருப்புப் பகுதியில், சக்கர நாற்காலியில் சென்று கொண்டிருந்த சுரேந்திர பால் என்ற நபர் இந்த அநாகரிகத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அவர் தனது கல்வி நிறுவனத்திற்குச் சென்று கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த புதன்கிழமை காலை 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு இளைஞர்கள், சுரேந்திர பாலை நெருங்கி அவரிடமிருந்த பணப்பையைத் திடீரெனப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடியுள்ளனர். அந்தப் பையில் சுமார் ₹5,000 ரொக்கப் பணம், ஒரு மொபைல் போன், கிரெடிட் கார்டுகள், புளூடூத் ஹெட்போன், பான் கார்டு (PAN card) மற்றும் சில முக்கியமான ஆவணங்கள் இருந்துள்ளன. தான் மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும், சுரேந்திர பால் தைரியமாகத் தனது சக்கர நாற்காலியில் திருடர்களைத் துரத்த முயன்றது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இந்தக் கொடூரமான திருட்டுச் சம்பவம் ஒட்டுமொத்தமாக அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில் குற்றவாளிகளின் முகமும், அவர்கள் தப்பிச் சென்ற பாதையும் தெளிவாகத் தெரிகின்றன. இந்த உறுதியான காட்சிகளின் அடிப்படையில், ஜிராக்பூர் போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை விரைவாகக் கைது செய்வதற்கான தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மக்க நடமாட்டம் உள்ள குடியிருப்புப் பகுதியில், அதுவும் பட்டப்பகலில் ஒரு மாற்றுத்திறனாளியைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. “சக்கர நாற்காலியில் செல்லும் ஒருவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் பாதுகாப்பு என்ன?” என்ற கேள்வியை எழுப்பியுள்ள அப்பகுதி மக்கள், தங்கள் பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளிடமிருந்து சுரேந்திர பாலின் உடமைகளை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
