LATEST NEWS
“எங்களுக்கு நீங்க கொடுக்குற கார் வேண்டாம்” 59 திமுக எம்.எல்.ஏ.க்களின் திடீர் முடிவு.. சபாநாயகருக்கு பறந்த பரபரபு கடிதம்..!!
சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் 59 பேருக்கும் அரசு தரப்பில் வழங்கப்படும் கார் தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அரசு கார்களை நிராகரிப்பதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தை திமுக எம்.எல்.ஏ. கோவி. செழியன், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் நேரில் வழங்கியுள்ளார். அரசின் செலவினங்களைக் குறைக்கும் நோக்கிலும், மக்கள் பணத்தைச் சேமிக்கும் வகையிலும் இந்தத் திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அரசு கார்கள் வேண்டாம் எனச் சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட அந்தக் கடிதத்தில், திமுக எம்.எல்.ஏ.க்கள் மட்டுமன்றி, திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி, மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி மற்றும் நித்தியானந்தன் ஆகியோரும் இந்தக் கடிதத்தில் இணைந்து கையெழுத்திட்டுத் தங்களது முடிவை உறுதிப்படுத்தியுள்ளனர். எதிர்க்கட்சியினரின் இந்த அதிரடி நடவடிக்கை தற்போது அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
