CRIME
அடப்பாவமே..! நகையை திருடப்போய் உயிரையே வாங்கிட்டாங்களே.. மூதாட்டி சடலம் அருகே இருந்த அந்த பொருள்… தலைமறைவான பெண்ணை கச்சிதமாக தூக்கிய தனிப்படை..!!
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற மூதாட்டி, கடந்த 15-ந்தேதி அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குனியமுத்தூர் போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகைகளைத் திருடுவதற்காக, நகையைப் பறிக்க முயன்றபோது சத்தம் போடாமல் இருக்க கொலையாளி அவரது வாயை பலமாக மூடியதில் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.
கொலை நடந்த இடத்தில் போலீசார் தடயங்களைச் சேகரித்தபோது, மூதாட்டியின் சடலத்திற்கு அருகே சில உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள் சிக்கின. இதனால் கொலையாளி ஒரு பெண்ணாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த ஆதாரங்களின்படி, அப்பகுதியில் இட்லி கடை நடத்தி வரும் பெண் ஒருவருக்கு இக்கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அந்த இட்லி கடை பெண் உரிமையாளரைக் குனியமுத்தூர் தனிப்படை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
