LATEST NEWS
“முருங்கைக்காய் சமைச்சி மச்சானை அசத்துங்க” புருஷனை முந்தானையில் முடிஞ்சி வச்சிக்கோங்க… பிரச்சார மேடையில் அதிமுக பெண் பேச்சாளர் பேசிய ஆபாச இரட்டை அர்த்த பேச்சு..!!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் முகாமிட்டுத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அதிமுகவின் கோட்டையாக இருந்த இந்த இரு தொகுதிகளையும் மீண்டும் தக்கவைத்துக் கொள்ள அக்கட்சியின் தலைமை பெரும் மல்லுக்கட்டி வருகிறது.
மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கணிதா சம்பத் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக அதிமுகவின் தலைவர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வீதி வீதியாக வாக்குக் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தை ஆதரித்துப் பிரச்சார மேடையில் பேசிய அதிமுக பெண் பேச்சாளர் ஒருவரின் பேச்சு தற்போது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள் அல்லது தொகுதிப் பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டிய தேர்தல் மேடையில், திரண்டிருந்த பெண்களை நோக்கி, “6ம் தேதி வரை வீட்டுக்காரர்களை முந்தானையிலே முடிந்து வச்சுக்கோங்க… நல்லா முருங்கைக்காய், முருங்கைக் கீரை சமைத்து மச்சானை அசத்து…” என அவர் பேசிய இரட்டை அர்த்த வரிகள் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
பொது மேடைகளில் பெண்களை வைத்தே இப்படியொரு நாகரிகமற்ற, ஆபாசப் பேச்சை அதிமுகவினர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது. பழைய காலத்து பாணியில் ஓட்டுக்காகப் பிரச்சார மேடைகளில் இதுபோன்ற தரம் தாழ்ந்த இரட்டை அர்த்தப் பேச்சுகளைப் பேசுவது வேதனைக்குரியது என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இடைத்தேர்தல் களத்தில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் அதிமுகவிற்கு, இந்தப் பெண் பேச்சாளரின் ‘முருங்கைக்காய்’ விவகாரம் தொகுதிக்குள் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.
