CRIME
“காக்கிச் சட்டைக்கே இந்த நிலைமையா..?” நடுரோட்டில் பெண் போலீஸிடம் அநாகரிகமாக நடந்த கும்பல்.. வைரல் வீடியோவை பார்த்து கொந்தளித்த நெட்டிசன்கள்..!!
பீகார் மாநிலம் பாட்னாவில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, உடனடியாக களத்தில் இறங்கிய பாட்னா போலீசார், பெண் அதிகாரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட கும்பலைச் சேர்ந்த பிரதீப் குமார் (22) என்ற வாலிபரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பொது இடத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பெண் காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமையா என்று பலரும் இந்த வீடியோவைக் கண்டு சமூக ஊடகங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தின் போது பெண் போலீஸ் அதிகாரியை மிரட்டும் தொனியில் பேசிய மேலும் இரண்டு ஆண்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அந்த இருவரையும் பிடிப்பதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வைரல் வீடியோவின் ஆதாரங்களைக் கொண்டு பாட்னாவின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெண் அதிகாரிகளுக்கு எதிரான இத்தகைய அத்துமீறல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், தப்பியோடிய மற்ற குற்றவாளிகளும் விரைவில் கூண்டில் அடைக்கப்படுவார்கள் என்றும் பாட்னா காவல்துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
