LATEST NEWS
“வாயை அடக்க வேண்டும்… இல்லையென்றால் அடக்கப்படும்..” மாணிக்கம் தாகூருக்கு திமுகவின் பகிரங்க வார்னிங்..! தமிழக அரசியலில் வெடித்தது புதிய மோதல்..!!
சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசுகையில் “தோற்றாலும் வெற்றி என்று நினைத்துக் கொண்டே இருங்கள், விளங்கவிடும். மக்கள் உங்களைத் தோற்கடித்துள்ளார்கள். உங்கள் மீது இருந்த நம்பிக்கையில் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 8000 வாக்குகள் குறைவாக வந்துள்ளன. தோல்வியில் வெற்றி, வெற்றியில் தோல்வி என்று சொல்வதை விட்டுவிடுங்கள்” எனக் கூறியிருந்தார். மேலும், திமுக பொய்ப் பிரச்சாரம் செய்வதாகவும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் குறித்த விமர்சனங்களையும் முன்வைத்த அவர், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை எதிர்ப்பதற்கு மட்டுமே நாங்கள் இருக்கிறோம் எனப் பேசியிருந்தார்.
மாணிக்கம் தாகூரின் இந்த கடுமையான விமர்சனங்களுக்கு திமுக தரப்பிலிருந்து மிகக் காட்டமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூட்டணியில் இல்லாத கழகத்தை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்! இல்லையென்றால் அடக்கப்படும்!” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே தனது திமிர்ப் பேச்சுகளால் தமிழ்நாட்டில் வலுவாக இருந்த கூட்டணியின் நற்பெயரைக் கெடுத்த காங்கிரஸ் புல்லுருவிகளின் கருத்துகள்தான் இந்த நிலைக்குக் காரணம் என்றும், பதவிப் பிச்சைக்காகக் கூட்டணி தர்மத்திற்கு எதிராகச் செயல்பட்ட காரணத்தால் இனி எங்கள் வழி தனி வழி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பதிவில், தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டங்களில் திமுக பங்கேற்கவில்லை எனக் கூற மாணிக்கம் தாகூருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் நோட்டீஸ் அளித்ததிலும், மேடைகளில் வெளிப்படையாகப் பேசியதிலும் திமுக முன்னணியில் இருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளனர். மாணிக்கம் தாகூர் சூடு, சொரணையுள்ள மனிதராக இருந்தால், காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சித் தலைவர்களைக் கேள்வி கேட்க வேண்டும் என்றும், திமுக குறித்து அவதூறு பேசுவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் அதற்குரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
