CRIME
“கூட வரலனா கொன்னுடுவேன்..” சண்டை போட்டுக் கொண்டு தாய்வீட்டில் இருந்த மனைவி… ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்ட கணவன்..! நடுநடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!
தேசியத் தலைநகர் டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வெல்கம் பகுதியில் உள்ள ஜந்தா மஸ்தூர் காலனியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. புதன்கிழமை இரவு, கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்திற்குப் பின், 24 வயதான முகமது பைசான் என்ற நபர், தனது 23 வயது மனைவி நேஹாவை நோக்கி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக, சமயோசிதமாகச் செயல்பட்ட அந்தப் பெண், உடனடியாக வீட்டிற்குள் ஓடித் தப்பித்து உயிர் பிழைத்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் உடனடியாகச் செயல்பட்ட வெல்கம் காவல் நிலையப் போலீசார், குற்றவாளியான கணவனைத் தாக்குதலுக்குப் பயன்படுத்திய சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஸ்கூட்டியுடன் கைது செய்தனர்.
குடும்பத் தகராறே இச்சம்பவத்திற்குக் முக்கியக் காரணமாக அமைந்தது. பாதிக்கப்பட்ட நேஹாவிற்கும், ஜோஹ்ரிபூரைச் சேர்ந்த முகமது பைசானுக்கும் இடையே சுமார் 3-4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆனதில் இருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். தினமும் வீட்டில் ஏற்படும் சண்டையால் மனமுடைந்த நேஹா, கடந்த 10-12 நாட்களாகத் தனது தந்தை அப்துல் குரேஷியின் வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார்.
புதன்கிழமை இரவு சுமார் 8 மணியளவில், பைசான் தனது ஸ்கூட்டியில் மனைவியின் வீட்டிற்கு வந்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி நேஹாவை வீட்டின் முதன்மை வாசலுக்கு வெளியே அழைத்த பைசான், உடனடியாகத் தன்னுடன் வீட்டிற்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். நேஹா வர மறுத்ததால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. ஆத்திரமடைந்த பைசான், அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டி, திடீரென தனது பாக்கெட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை வெளியே எடுத்து சுட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்ததும் நேஹா சுதாரித்து வீட்டிற்குள் ஓடியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் பைசானைக் கைது செய்து மேல்நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
