LATEST NEWS
“தப்பு செஞ்சா உடனே தண்டனை” போதைப்பொருள் கடத்தல் புகார்… தவெக நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம்…!!
இலங்கையிலிருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட நிர்வாகி பூபாலன் என்பவர் சிக்கியுள்ளார். இது தொடர்பாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் இன்று நாகை மாவட்டம் கீழையூரில் உள்ள பூபாலனின் இல்லத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, பூபாலன் வீடு மற்றும் அவரது நண்பரான பிரதாபராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுகன் என்பவரது வீடு ஆகிய இடங்களில் 8 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் முடிவில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோவிற்கும் அதிகமான சர்வதேச போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.100 கோடி இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், பூபாலனை அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரைத் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து நீக்கி கட்சித் தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து தவெக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன் வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், கீழையூர் தவெக ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பூபாலன் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
