LATEST NEWS
அதிமுகவில் வெடித்த பயங்கர உட்கட்சி மோதல்..! சி.வி. சண்முகத்தின் 2000 ஆதரவாளர்கள் அதிரடி நீக்கம்… பின்னணி என்ன..?!
அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 2,000க்கும் மேற்பட்டோரை கட்சியிலிருந்து பொதுச்செயலாளர் பழனிசாமி நீக்கியுள்ளார். சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின் அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் அதிருப்தி அணி செயல்பட்டு வருகிறது. தேர்தல் தோல்வி குறித்து பொதுக்குழுவைக் கூட்டி விவாதிக்குமாறு அவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், சண்முகத்தின் ஆதரவாளர்களைக் குறிவைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து பழனிசாமி நீக்கி வருகிறார்.
இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலர் கூறுகையில், சட்டரீதியான விஷயங்களில் பழனிசாமிக்கு பெரும் துணையாக இருந்தவர் சி.வி. சண்முகம் என்றும், பழனிசாமியின் பலவீனங்கள் அனைத்தும் அவருக்குத் தெரியும் என்றும் தெரிவித்தனர். உட்கட்சி மோதலால் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து சண்முகத்தை நீக்கியபோதிலும், அந்த மாவட்டத்தில் பழனிசாமியால் எதுவுமே செய்ய முடியவில்லை. மேலும், சண்முகம் எம்.எல்.ஏ.வாக இருப்பதால் அவரை கட்சியிலிருந்து நீக்க முடியவில்லை; அதனால் அவரைத் தனிமரமாக்கும் நோக்கில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் 2,000க்கும் மேற்பட்டோரின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், வேலுமணி ஆதரவாளர்கள் மீது பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சி.வி. சண்முகம் மீது பழனிசாமிக்கு தனிப்பட்ட கோபம் இருப்பதாகத் தெரிகிறது. இதற்கு கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் முனுசாமியும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. வன்னியர் சமுதாயத்திற்கு யார் தலைவர் என்ற போட்டி முனுசாமிக்கும், சண்முகத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அந்தப் பிரச்சினையை பழனிசாமி வாயிலாக முனுசாமி தீர்த்துக் கொள்கிறார் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
