LATEST NEWS
“நிதிஷ் குமாருக்காக 9 பேரை கொன்னேன்…12 மணி நேரத்தில் மாறிய பிளேட்…” சர்ச்சையானதும் திடீரென பல்டி அடித்த ஜே.டி.யு MLA..! பின்னணி என்ன..?!
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (JDU) கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனந்த் குமார் சிங் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் பீகார் அரசியல் தலைவருமான நிதிஷ் குமாரின் அரசியல் ஆதாயத்திற்காக தான் ஒன்பது பேரைக் கொன்றதாகக் கூறி அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய அவர், தனக்கு நிதிஷ் குமாருடன் நீண்டகால தொடர்பு இருப்பதாகவும், கடினமான காலங்களில் அவருக்குத் துணையாக நின்று அவருக்காக 9 பேரைக் கொன்றதாகவும் தெரிவித்தார்.
பீகாரில் பாட்னா கிராஜுவேட்ஸ் தொகுதிக்கு நடைபெற உள்ள சட்ட மேலவை தேர்தலில், தனது அரசியல் போட்டியாளரான நீரஜ் குமாருக்கு கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் போதே அனந்த் குமார் சிங் இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது.
இந்தக் கருத்துக்கள் பெரும் சர்ச்சையானதை அடுத்து, அனந்த் சிங் தனது நிலைப்பாட்டிலிருந்து உடனடியாகப் பின்வாங்கினார். தனது வார்த்தைகள் திரித்துக் கூறப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், லாலு பிரசாத் யாதவின் ஆட்சிக்காலத்தில் தனது ஒன்பது ஆதரவாளர்கள் கொல்லப்பட்டதாகவும், தன் மீதும் ஒரு கொலை முயற்சி நடந்ததாகவுமே தான் கூற வந்ததாகவும், நிதிஷ் குமாரை ஆதரித்ததாலேயே லாலுவின் தரப்பு இந்தக் கொடூரங்களைச் செய்ததாகவும் விளக்கம் அளித்தார். இதற்கிடையே, அனந்த் சிங்கின் கருத்துக்கள் தேவையற்றவை என ஜே.டி.யு. தரப்பு கூறியுள்ள நிலையில், குற்றப் பின்னணி கொண்டவர்களுடன் நிதிஷ் குமார் கைகோர்த்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
