CRIME
உச்சகட்ட கொடூரம்..! எஸ்சி/எஸ்டி வழக்கு தொடர்ந்த தலித் இளைஞர்.. மனைவி, மகள் கண் முன்னே அடித்துக் கொலை – 4 பேர் கைது..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள லுதௌரா கிராமத்திற்கு அருகே, 35 வயதான மனோஜ் கௌதம் என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், அவரது மனைவி மற்றும் 10 வயது மகளின் கண் முன்னே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். வியாழக்கிழமை மாலை தனது மகளுடன் உள்ளூர் சந்தையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரை வழிமறித்து இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் எஸ்சி/எஸ்டி (SC/ST) வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுபம் சிங், தீரேந்திர சிங் மற்றும் நரேந்திர சிங் உட்பட நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட மனோஜ் கௌதம் இதற்கு முன்னரே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்திருந்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனத் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கௌதமின் உடலுக்கு அருகில் அவரது குடும்பத்தினர் கதறி அழும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
