CRIME
“கட்சியில் முக்கியப் பொறுப்பு வாங்கித் தர்றேன்..!” திருமணமான பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி.. கண்ணீருடன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.. அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி..!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பெண் நிர்வாகி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கட்சி நிர்வாகி சசிகுமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஜாக்குலின் மேரி என்ற இரு குழந்தைகளின் தாய், தவெக உறுப்பினராக இருந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது, தவெக அரக்கோணம் கிழக்கு ஒன்றியச் செயலாளரான சசிகுமார், கட்சியில் முக்கியப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி அறிமுகமாகி, அவரைத் தனது வீட்டிற்கு வரவழைத்துப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமாரின் இந்தச் செயலுக்கு இணங்க மறுத்தபோது, ஜாக்குலின் மேரியையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தங்களின் வீடியோ ஆதாரங்களைக் காட்டித் தொடர்ந்து மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததால் தான் கர்ப்பமானதாகவும், அதன் பின்னர் சசிகுமார் தன்னை மிரட்டிக் கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் ஜாக்குலின் மேரி வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தவெக அரக்கோணம் மேற்கு ஒன்றியச் செயலாளர் தளபதி மணியிடம் முறையிட்டபோது, அவர் இப்பிரச்சினையைப் பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறி தம்மையும் மிரட்டியதாகப் பெண் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் மிரட்டல்களால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஜாக்குலின் மேரி, இறுதியாக அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் சசிகுமார் மற்றும் தளபதி மணி மீது புகார் அளித்துள்ளார். தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகிகள் மீது பெண் உறுப்பினர் ஒருவரே இத்தகைய கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள இச்சம்பவம் அரக்கோணம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
