CRIME
“பள்ளியா? இல்ல நரகமா..?” காமுக தலைமை ஆசிரியரால் கர்ப்பமாகி உயிரிழந்த பழங்குடியின சிறுமி.. 15 பேர் கூட்டுச் சேர்ந்து மூடி மறைத்த கொடூரத்தின் பின்னணி..!
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் அரசுப் பள்ளியில் படித்து வந்த பழங்குடியின சிறுமி ஒருவர், பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியரால் பல மாதங்களாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பமடைந்தது, அவர் மரணமடைந்த பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுமி கர்ப்பமடைந்த விபரம் தெரிந்ததும், சட்டப்படி அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மூடி மறைக்க முயன்றதாகக் காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது. மேலும், சமூகப் புறக்கணிப்பு ஏற்படும் என்று சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டி, சட்டவிரோதமாகக் கர்ப்பத்தை கலைக்க முயன்ற போது உடல்நிலை மோசமடைந்து அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் வெடித்த போராட்டங்களை அடுத்து, இந்த வழக்கு சிறப்பு விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியான தலைமை ஆசிரியர் மட்டுமின்றி, அவருக்குத் துணையாக இருந்த இரண்டு மருத்துவர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் நபர்கள் என மொத்தம் 15 பேர் மீது 1000 பக்கங்களுக்கும் அதிகமான விரிவான குற்றப்பத்திரிகையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதில் மருத்துவப் பதிவுகளில் சிறுமியின் வயதை மாற்றிக் காட்டியது, அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காதது உள்ளிட்ட போக்சோ சட்ட விதிமீறல் குற்றச்சாட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் தொலைபேசி அழைப்பு விவரங்கள், சிசிடிவி காட்சிகள், மருத்துவப் பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களைச் சேகரித்துள்ள போலீசார், அடுத்தகட்டமாக சிறுமி மற்றும் உயிரிழந்த நிலையில் பிறந்த குழந்தையின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர். அந்த முடிவுகள் வந்தவுடன் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. பள்ளி, மருத்துவமனை எனப் பாதுகாப்பளிக்க வேண்டிய அமைப்புகளே தவறிழைத்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான சில அரசு ஊழியர்கள் மீதும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
