CRIME
அழுதுகொண்டே இருந்த 8 மாதக் குழந்தை.. கழுத்தை நெரித்துக் கொன்று சதுப்பு நிலத்தில் வீசிய கள்ளக்காதலன்.. 3 ஆண்டுக்குப் பின் தாயின் வாக்குமூலத்தால் அம்பலமான கொடூரம்..!
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில், இரவில் தூங்காமல் அழுத காரணத்திற்காக 8 மாதக் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூர சம்பவம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த போலீஸார், குழந்தையின் தாயான மஞ்சி (35) என்பவரைக் கைது செய்துள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று புலி கீழு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்வெளி சதுப்புநிலப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் குறித்த ரகசியம் தற்போது அம்பலமாகியுள்ளது.
போலீஸ் விசாரணையின்படி, கைதான மஞ்சிக்கு 2023-ல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 8 மாதக் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது கடையில் வேலை பார்த்த சிவனும் மஞ்சியும் பழகி, சங்கனாச்சேரி பகுதியில் ஒன்றாக வசித்து வந்தனர். 2023 ஆகஸ்ட் மாத இரவு ஒன்றில் குழந்தை தூங்காமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால், ஆத்திரமடைந்த சிவன் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், சிவனுக்கு உதவியாக அவனது தம்பி சக்தியும் சேர்ந்து சடலத்தைச் சதுப்பு நிலப் புதர் பகுதியில் வீசிவிட்டுத் தப்பியுள்ளனர்.
சமீபத்தில் மஞ்சி தன் சொந்த ஊரான பாலக்காடு காலனிக்குக் குழந்தை இல்லாமல் தனியாகத் திரும்பியுள்ளார். குழந்தை எங்கே எனக் காலனி நிர்வாகிகள் கேட்ட கேள்விக்கு மஞ்சி முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், சந்தேகமடைந்த அவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில் மஞ்சி உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரக் கொலையில் தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான கள்ளக்காதலன் சிவன் மற்றும் அவரது தம்பி சக்தியைப் பிடிக்கத் தனிப்படை (SIT) போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
