LATEST NEWS
மேடையில் பாடகரை அவமதித்த அமைச்சர்… “அவர் என் நண்பர், நான் பேசுறேன்” – தலேர் மெஹந்தி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் தாமி..!
உத்தரகண்ட் மாநிலத்தின் மா குஞ்சாபுரி திருவிழாவில் பிரபல பஞ்சாபி பாடகர் தலேர் மெஹந்தியின் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, “அவர் எனது நண்பர், நான் அவரிடம் பேசுவேன்” என்று கூறி இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் எப்போதுமே கலைஞர்களையும், இலக்கியவாதிகளையும் மதிக்கும் ஒரு பூமி என்று குறிப்பிட்ட முதலமைச்சர், இந்த விவகாரத்தில் அமைச்சர் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டதால் சர்ச்சையை இத்துடன் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என டேராடூனில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சர்ச்சையின் பின்னணியில், டெஹ்ரி கர்வால் பகுதியில் நடைபெற்ற திருவிழா மேடையில் தலேர் மெஹந்தி பாடிக்கொண்டிருந்த போது, உத்தரகண்ட் கேபினட் அமைச்சர் சுபோத் உன்னியால் மேடையில் ஏறி பாடகரின் செயல்பாட்டை விமர்சித்தார். பாடகர் மது அருந்திவிட்டு வந்து குழப்பத்துடன் பாடுவதாகவும், பாடல்களுக்கு லிப்-சிங்க் செய்வதாகவும் அமைச்சர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ஆனால், பொதுமக்களின் அழுத்தம் காரணமாகவே தான் அவ்வாறு பேசியதாகவும், தலேர் மெஹந்தியின் உடல்நிலை குறித்து தனக்கு அப்போது தெரியாது என்றும் அமைச்சர் பின்னர் விளக்கமளித்ததை முதலமைச்சர் தாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
மறுபுறம், இந்த சம்பவத்திற்கு தலேர் மெஹந்தியின் தம்பியும் பாடகருமான மீக்கா சிங் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனது அண்ணன் மது அருந்தும் பழக்கம் இல்லாதவர் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் நிலையிலும் ரசிகர்களுக்காகப் பாடி வருகிறார் என்றும் மீக்கா சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், வெஸ்டர்ன் இந்தியா சினி எம்ப்ளாயிஸ் கூட்டமைப்பும் (FWICE) இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் தாமி ஆகியோருக்குக் கடிதம் எழுதி, மக்கள் பிரதிநிதிகள் கலைஞர்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
