LATEST NEWS
“சேலை கட்டி வெறுங்காலுடன் ஓடி அசத்திய ஏழை தாய்..” ஆனா கிளைமாக்ஸில் அதிர்ச்சி கொடுத்த ‘3 வாய்ப்புகள்’.. கண்கலங்க வைக்கும் பின்னணி..!!
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா குமாரி என்ற ஏழைப் பெண், வறுமை மற்றும் குடும்பச் சுமைகளுக்கு மத்தியிலும் ஊர்க்காவல் படையில் சேருவதற்காக மேற்கொண்ட விடாமுயற்சி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கணவரை இழந்த கவிதா, தனது இரண்டு குழந்தைகள் மற்றும் வயதான மாமனார், மாமியாரைப் பராமரிக்கக் கூலி வேலை செய்து வருகிறார். குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிலையான வேலை தேடிய அவர், விளையாட்டு உடைகளோ அல்லது ஓட்டப் பந்தயத்திற்கான காலணிகளோ இல்லாத நிலையிலும், சேலை அணிந்து வெறுங்காலுடன் ஓடித் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
ராம்கர் மாவட்டத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ ஊர்க்காவல் படை உடற்தகுதித் தேர்வில் கவிதா பங்கேற்றார். பெண்களுக்கான 1,600 மீட்டர் ஓட்டப்பந்தய இலக்கை 10 நிமிடங்களுக்குள் கடக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்த நிலையில், கவிதா அதனை 8 நிமிடங்கள் 57 வினாடிகளிலேயே கடந்து சாதனை படைத்தார். சேலை அணிந்தபடி வெறுங்காலுடன் அவர் ஓடி வெற்றி பெற்ற காட்சிகள் இணையத்தில் பரவி, பலரது பாராட்டுகளையும், வேலை கிடைத்துவிடும் என்ற பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
இருப்பினும், அடுத்த கட்டமாக நடைபெற்ற உயரம் தாண்டுதல் தேர்வில் அவருக்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளிலும் குறிப்பிட்ட உயரத்தைத் தாண்ட முடியாமல் போனதால், அவர் துரதிர்ஷ்டவசமாகக் கடைசிக் கட்டத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார். ஓட்டப்பந்தயத்தில் அசத்தியபோதிலும், உயரம் தாண்டுதலில் ஏற்பட்ட இந்தத் தடையால் ஊர்க்காவல் படையில் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது கனவு இந்த முறை நிறைவேறாமல் போனது, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
