LATEST NEWS
“நீ அந்த சாதிக்காரி தான” பெண்ணுக்கு கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை, வீட்டின் முன் துணி காயப்போட எதிர்ப்பு.. 5 பேர் மீது அதிரடி எஃப்.ஐ.ஆர்..!!
ஜூலை மாதம் முதல் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜகந்நாத்பூர் பகுதியில் வசிக்கும் மஞ்சு என்ற தலித் பெண், அருகில் உள்ள பொதுக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கவிடாமல் அண்டை வீட்டாரால் தொடர்ந்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சாதி வெறி மற்றும் தீண்டாமை காரணமாக அவரைப் பொதுக் கிணற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி கடுமையாகப் அவமானப்படுத்தி வந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தனது வீட்டின் வெளியே துணிகளைக் காயப்போடுவதற்கும் அண்டை வீட்டார் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தங்கள் வீட்டின் வழியாகச் செல்லும்போது தலித் பெண்ணின் துணிகள் படுவதால் தாங்கள் ‘அசுத்தமடைவதாகக்’ கூறி, சாதி ரீதியாகத் திட்டித் தீர்த்ததுடன் பொதுவெளியில் அவரைத் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அமரேந்திர குமார், அவரது மனைவி ரேமி தேவி, அவர்களின் மகன்கள் ஆதித்யா, அமன் மற்றும் உபேந்திர யாதவ் ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
