CRIME
மனைவியின் கள்ளக்காதலை எதிர்த்த கணவன்.. மாமனார் வீட்டில் பிணமாக மீட்பு.. அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டதாக அக்கா கணவர் உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு..!!
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில், தனது மனைவியின் கள்ளக்காதலை எதிர்த்த சந்தோஷ் சா என்ற வாலிபர், மாமனார் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவிக்கும், அவரது அக்கா கணவருக்கும் (சகோதரியின் கணவர்) இடையே இருந்த சட்டவிரோத உறவை அவர் தொடர்ந்து கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், மனைவியை குடும்பம் நடத்த அழைப்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை மாமனார் வீட்டுக்குச் சென்ற சந்தோஷ், மறுநாள் காலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சந்தோஷின் உடலில் ஆங்காங்கே காயங்கள் மற்றும் அடிதடித் தழும்புகள் இருந்ததால், இது தற்கொலை அல்ல என்றும், அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை போல நாடகமாட தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என்றும் அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்திற்கான முக்கிய ஆதாரங்களும், ஆடியோ பதிவுகளும் சந்தோஷின் மொபைல் போனில் இருந்ததால் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக உயிரிழந்த வாலிபரின் மனைவி ரீனா தேவி, கள்ளக்காதலனான அக்கா கணவர் பிபின் சா, மாமியார் மற்றும் மைத்துனி ஆகிய 4 பேர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து தப்பியோடிய 4 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே இது கொலையா அல்லது தற்கொலையா என்பது முழுமையாகத் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
