LATEST NEWS
ரூ.5000 கோடி மெகா மோசடி மன்னன்… CM விஜய்யுடன் போட்டோ.. தவெகாவுக்கு என்ன தொடர்பு..? உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு.. பின்னணி என்ன..?
பாரத் லஜ்னா பல மாநில வீட்டுவசதி கூட்டுறவு சங்கம் (BLM) என்ற நிதி நிறுவனத்தின் நிறுவனத் தலைவரான பிரேம் குமார், அதிக வருமானம் தருவதாகக் கூறி முதியவர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து வைப்புத்தொகைகளைப் பெற்றுள்ளார். முதலீட்டுத் திட்டம் முதிர்வடைந்தும் பணத்தைத் திருப்பித் தராமல், விதிகளுக்குப் புறம்பாக சுமார் ரூ.5000 கோடி பணத்தைத் தனது தனிப்பட்ட கணக்குகளுக்கும், பிற வணிக நிறுவனங்களுக்கும் திருப்பியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும் பணமோசடி வழக்கைப் பதிவு செய்துள்ளது.
இந்தச் சூழலில், கோழிக்கோடு பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசாரால் பிரேம் குமார் அக்டோபர் 29 அன்று சென்னையில் வைத்துக் கைது செய்யப்பட்டார். கைதைத் தவிர்க்க அவர் திருவனந்தபுரத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், பின்னர் சென்னை வந்த அவரைப் பின்தொடர்ந்து வந்து போலீசார் கைது செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உடல்நலக்குறைவு காரணமாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, பிரேம் குமார் தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் தலைமைச் செயலகத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரேம் குமார் தமிழக வெற்றிக் கழகத்துடன் தொடர்புடையவர் என்றும், இந்த விவகாரத்திற்குப் பின் அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சருடனான சந்திப்பின் போது பிரேம் குமார் ‘நியூஸ் தமிழ் 24×7’ செய்தி நிறுவனத்தின் இயக்குநர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தார். ஆனால், அவருக்கும் தங்கள் நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) பத்திரிக்கை அறிக்கையில் தவறுதலாக அவ்வாறு குறிப்பிட்டுவிட்டதாகவும் அந்நிறுவனத்தின் தலைவர் சகிலன் பத்மநாபன் தெளிவுபடுத்தியுள்ளார். பிரேம் குமார் ‘நியூஸ் மலையாளம் 24×7’ நிறுவனத்தின் ஒரே பங்குதாரர் என்பதும் குறிப்பிடத்தக்கது
