LATEST NEWS
மாஜி அமைச்சர் அன்பில் மகேஷ் வழக்கில் அடுத்தடுத்த அதிரடி திருப்பம்—முன்னாள் MLA திடீர் சரண், நீளும் சிறைவாசம்..!!
திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் சுமார் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அக்டோபர் 26 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சுமார் 117 பள்ளிகளில் இந்த வசூல் வேட்டை நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கில், ஏற்கனவே பிரதான குற்றவாளியான பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு குற்றவாளியான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார் தலைமறைவாக இருந்த நிலையில், தற்போது நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை நவம்பர் 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமான வரி செலுத்துபவர் என்ற அடிப்படையில் முத்துக்குமாருக்குச் சிறையில் முதல் தர வசதிகள் மற்றும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்போது புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஷும் முதல் வகுப்பு அறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, அன்பில் மகேஷ் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவுக்குப் பதிலளிக்குமாறு மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதே சமயம், முத்துக்குமாருக்கும் முன்னாள் அமைச்சருக்கும் உள்ள தொடர்புகள் மற்றும் பணப் பரிமாற்றப் பாதையைக் கண்டறிய அன்பில் மகேஷை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிசிபி போலீசார் தனியாக மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
