CRIME
“அவள் என்னோடவள்.. கல்யாணம் பண்ணா..!” மணமேடையில் மணமகனுக்கு வந்த போன் கால்… அடுத்த நிமிடமே நடந்த பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவின் மண்டி தனௌரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமண மேடையில் மணமகனுக்கு வந்த கொலை மிரட்டல் அழைப்பால், மணமகன் வீட்டார் மணப்பெண் இல்லாமல் திருமண ஊர்வலத்தைத் திருப்பி அழைத்துச் சென்ற விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணச் சடங்குகள் நடக்கவிருந்த கடைசி நேரத்தில் மணமகனின் மொபைல் போனுக்கு அழைத்த நபர், தான் மணப்பெண்ணின் காதலன் என்று கூறி, “அவள் என்னுடையவள், அவளை நீ திருமணம் செய்தால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவேன்” எனப் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலால் அதிர்ச்சியடைந்த மணமகன், உயிருக்கு பயந்து திருமணத்தை உடனடியாக நிறுத்தினார். ஆனால், மணப்பெண்ணின் சகோதரர் தங்களுக்குள் எந்தவிதமான காதல் விவகாரமும் இல்லை என்றும், குடும்பப் பகை காரணமாகவே யாரோ திட்டமிட்டு இந்த மிரட்டல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே காவல் நிலையத்தில் வைத்து சுமார் 4 மணி நேரம் நீண்ட பஞ்சாயத்து நடத்தப்பட்டது. காவல்துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியும் மணமகன் வீட்டார் சமாதானமடையாததால், இறுதியில் மணப்பெண் இல்லாமலேயே திருமண ஊர்வலம் ஏமாற்றத்துடன் திரும்பியது. இந்த அச்சுறுத்தல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மண்டி தனௌரா காவல்துறையினர், மணமகனுக்குக் கொலை மிரட்டல் விடுத்த முக்கியக் குற்றவாளியை அதிரடியாகக் கைது செய்து காவலில் எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
