CRIME
“நிலத்தை எழுதி தா” துண்டால் இறுக்கி, கத்தியால் கழுத்தை அறுத்து.. அண்ணன் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த மைத்துனர்கள்… கொலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!!
மகபூப்நகர் மாவட்டம் கொயில்கொண்டா மண்டலம் சிந்தல்தண்டா பகுதியில், சொத்துக்காக அண்ணன் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த மைத்துனர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பலராம் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சுனிதா (28) என்ற பெண்ணிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பலராமின் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பஞ்சாயத்து மூலம் சுனிதாவின் பெயரில் ஒரு ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்ட பலராமின் சகோதரர்களான பாண்டுநாயக் மற்றும் மன்யாநாயக், தம்பதியினரை ஒன்றாக வாழவிடாமல் தடுத்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் சுனிதா தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்ற நிலையில், பெற்றோரின் சமாதானத்திற்குப் பிறகு சிந்தல்தண்டா பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிய வீடு கட்டி வசித்து வந்தார். அங்கு சென்றும் அந்தச் சகோதரர்கள் நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு சுனிதாவிற்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நவம்பர் 2ஆம் தேதி மதியம், பாண்டுநாயக், மன்யாநாயக், பாண்டுவின் மனைவி பார்வதி மற்றும் மாமா மாணிக்யநாயக் ஆகியோர் இணைந்து சுனிதாவைத் தாக்கியுள்ளனர். அவரது கழுத்தில் துண்டை மாட்டி இழுத்துச் சென்று, கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கொலை நடந்த சமயத்தில் சுனிதாவின் கணவர் ஹைதராபாத்தில் இருந்த நிலையில், சுனிதாவின் தந்தை வல்யாநாயக் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
